Sunday, February 27, 2011

மஹா சிவராத்திரி 02-03-2011

அன்னை பார்வதி சிவ பூஜை செய்யும் காட்சி



விரி கடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், காற்றாகி எட்டு திசையான சங்க வெண்குழைக் காதுடை செம்பவள மேனி எம் இறைவன் சிவ பரம் பொருளுக்கு மிகவும் உகந்த அஷ்ட மஹா விரதங்களாக ஸ்கந்த புராணம் கூறுபவை 1. சோம வார விரதம், 2.திருவாதிரை, 3.உமா மஹேஸ்வர விரதம், 4. மஹா சிவராத்திரி விரதம், 5.கேதார விரதம், 6. கல்யாண விரதம், 7. சூல விரதம் 8. ரிஷப விரதம், ஆகியவை ஆகும்।



இந்த விரதங்கள் அனைத்தும் நமது உடலையும் உள்ளத்தையும் து‘ய்மைப்படுத்தி இந்த சம்சார சாகரத்திலிருந்து நம்மை விடுவித்து அந்த இறைவனுடைய திருவடியில் சரணடைய உதவுகின்றன। இவற்றுள் மஹா சிவராத்திரியின் மேன்மையையும், அதைக் கொண்டாடுவதால் நாம் அடையும் பலன்களையும் இந்த நன்னாளை ஒட்டி திருவிழாக்கள் நடைபெரும் இரு அம்மன்களின் வரலாறுகளையும் பற்றிப் பார்ப்போமா?


மஹா சிவராத்திரி நாள்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

திருக்காளத்தி வாயு லிங்கம்


அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.



தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள்,

அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்,

கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள்,

பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு கொண்டு வந்த நாள்
\
என்று இந்நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.

சிவராத்திரி நித்ய, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகின்றது.

நித்ய சிவராத்திரி : தினம் தோறும் வரும் இரவு நித்ய சிவராத்திரி ஆகும்.

மாத சிவராத்திரி : ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி மாத சிவராத்திரி ஆகும்.

பக்ஷ சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் சதுர்த்தசி வரை 13 நாட்கள் பக்ஷ சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி : திங்கட்கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்.

மஹா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி.

இவற்றுள் மஹா சிவராத்திரி விரதம் தான் வெகு சிறப்பாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
முதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி விரத முறை : சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக்கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்ல மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

மஹா சிவராத்திரி விரதப்பலன்: அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நம்து எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடன் வாழ்ந்து வந்தான் ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் -காண்டான்.புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான். அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே து‘ங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடம்் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு சிவ லிங்கம் இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் து‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இத்தகைய சிறப்புகளையுடைய மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் விரதம் அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.
 
கலியுகம் நாம ஸ்மரணைக்கு உகந்த யுகம். இறைவனின் நாமங்களைச் சொன்னாலே நற்கதி கிடைக்கக் கூடிய காலம். அந்த சிவ நாம ஸ்மரணையின் நற்பலன்களை மிக அழகாக பாடலாக இயற்றி, ராகம் அமைத்து, தேன்குரலில் பாடியவர் நெய்வேலி ஸ்ரீமதி பிருந்தா ஜெயந்தி (94436 66819) அவர்கள். அந்தப் பாடலை இங்கே ஆடியோவாகக் கேட்கலாம்.

*******

Wednesday, February 9, 2011

Radha Saptami, popularly known as Ratha Saptami, is the festival to celebrate Surya Jayanti. On Radha Saptami, performing ceremonial bath in holy rivers like Ganga, Godavari, Yamuna, Narmada, Cauvery, Krishna, etc. is considered as auspicious. While ritual bath on Ratha Saptami, devotees recite the mantra given below: - Ratha Saptami Snan Mantram:
Yadhaa janma krutham paapam maaya janmasu janmasu
Thanme rogancha shokancha maakarihanthu saptamee
Etha janmakrutham paapam yachcha janmanthararjitham
Manovaakka yajam yachcha gnatha gnalechayepunah
Ratha Saptami Snan is considered auspicious in Magh Mela and Kumbh Mela snan. Surya namaskar and Surya Argh are also auspicious.
After the ritual bath, devotees give arghya to surya bhagwan on Radha Saptami. Surya Bhagwan is worshipped with Ashtottara and shodashopachar puja and offered jaggary.
Radha Saptami Surya Arghya Mantram:
Saptha saptha hahapreetha sapthaloka pradeepana
Saptamee sahitho devaa gruhaanaarghyam divakaraa

பணக்காரனாக எளிய விரதம்! -பிப்.10 – ரத சப்தமி


சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். “சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம். தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
இவ்வாண்டு ரதசப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காலையிலேயே நீராடி, பணிகளை விரைவில் துவக்கி விடுங்கள். பணக்காரர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.