Thursday, March 31, 2011

* * ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு * *

* *  ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு * *

விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உள்பட்ட ஹம்பி எனும் சின்னஞ்சிறு கிராமம்.


அங்கே இருந்த வீடுகளுள் ஒன்றிலிருந்து வேத மந்திரங்களின் ஒலி எழுந்து, அந்த கிராமம் முழுதும் நிறைந்து கொண்டிருந்தது. அதற்குக் காரணமான திம்மண்ணபட்டர், தம் வீட்டின் நடுவே அமர்ந்து, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு, வேதத்தினை சொல்லித் தந்து கொண்டிருந்தார்.


வேத விற்பன்னரான திம்மண்ணபட்டர், வீணையை மீட்டி இனிமையாக நாதம் எழுப்புவதிலும் வல்லவர்.


வேதமும், வீணை நாதமும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், வேதனையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது, திம்மண்ணபட்டரின் மனதில். வேதஒலியும், வீணை இசையும், ஒரு குழந்தையின் அழுகைக் குரலுக்கு ஈடாக முடியுமா? அப்படியோர் அழுகைச் சங்கீதம் தம் வீட்டில் ஒலிக்கவில்லையே...! என்பதுதான், அவரது வேதனைக்குக் காரணம்.


வேதனையைப் போக்கவல்லவன், வேங்கடவனே என நினைத்த திம்மண்ணர், மனைவி கோபாம்பாளையும் அழைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்றார். வேங்கட அசல பதியை வேண்டினார். திருமாலின் அருளால், திருமகள் ஒருத்தி பிறந்தாள் திம்மண்ணருக்கு. வெங்கடம்மாள் என்று பெயரிட்டு வளர்த்தார். மீண்டும் திருப்பதிமலையானை வேண்டினார். "திருப்தியாக வாழ்" என்று, ஆண் மகவு ஒன்றை அருளினான், திருமலையான். குருராஜன் எனப் பெயரிட்டார்கள் குழந்தைக்கு.


அந்தச் சமயத்தில், ஹம்பியை விட்டு புவனகிரி எனும் கிராமத்திற்குக் குடி வந்திருந்தார் திம்மண்ணா.


சிறிது காலத்திற்குப் பின், "மனை சிறக்க மகப்பேறு" தந்த மலையப்பனுக்கு நன்றி சொல்லி வணங்க, மனைவியோடு மீண்டும் திருமலைக்குச் சென்றார், திம்மண்ணா. ஆனால், திருப்பதி சென்றதும் அவர் மனதுள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது. அதனால், வேங்கடவனை வேண்டினார், ""மாதவா... மாதவம் புரிந்தோர் பெற்றிடும் பேறு போல், மகா மேதையான மகனைப் பெற்றிடும் வரம் தா!""


வேண்டுவோர் வேண்டுவன தருபவன் அல்லவா வேங்கடவன்! திம்மண்ணர் விஷயத்திலும், அப்படியே செய்தான். அதன் பலனாக, 1598_ம் வருடம், பால்குண ஆண்டு, சுக்லபட்ச சப்தமி, வியாழக்கிழமையன்று, மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், திம்மண்ணபட்டர், கோபாம்பாள் திருமனையில், ஆண்குழந்தை ஒன்று பிறந்து, அழுதது! அந்த அழுகை, திம்மண்ணர் மீட்டும் வீணை இசையை வீணாக்கிவிட்டு சங்கீதமாய் எதிரொலித்தது.


வெங்கடேசன் அருளால் பிறந்த குழந்தைக்கு, அவன் பெயரையே சூட்டி, ""வெங்கட நாதா"" என்று வாய்நிறைய அழைத்தார், அப்பா! பாலூட்டி, தாலாட்டி, சீராட்டினாள் அம்மா...!


நாட்கள் நகர்ந்தன... குழந்தை வெங்கடநாதனுக்கு பல் முளைக்க ஆரம்பித்தது... கூடவே, சொல்லும் முளைத்தது... அதுவும், வேதச் சொல். அதனால், முத்துப் பற்கள் முளைத்து அவனுக்கு மூன்று வயது நிரம்பியதுமே வித்யாப்பியாசம் செய்துவைத்தார், திம்மண்ணர்.
சரஸ்வதி இருக்குமிடத்தில், தனக்கு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என நினைத்தோ என்னவோ, திம்மண்ணரின் வீட்டுக்குள் நுழைய மகாலட்சுமி தயங்கினாள். எனவே, குழந்தை வெங்கடநாதனின் கல்விஞானம் வளர்ந்தபோது, வீட்டில் வறுமையும் சேர்ந்து வளர்ந்தது. குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கப் பிடிக்காமலோ என்னவோ, சீக்கிரமே திருமாலின் திருவடி சேர்ந்தார் திம்மண்ணபட்டர்.


அம்மாவுடன் அண்ணன் குருராஜர் தங்கிவிட, அக்கா வெங்கடம்மாளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டான் வெங்கடநாதன்.


வெங்கடம்மாளின் கணவர் லட்சுமி நரசிம்மாசாரியார், மைத்துனனை மகனாகவே பாவித்து பாசம் காட்டி வளர்த்தார். அதோடு, ஆசானாக இருந்து அனைத்தையும் போதித்தார். கற்பிக்கப்பட்ட அனைத்தையும் கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டான், வெங்கடநாதன்.


ஆண்டுகள் வளர்ந்தன... வெங்கடநாதனின் அறிவு வளர்ந்தது... கூடவே, அவனும் வளர்ந்தான். தம்பியைப் பார்க்க வந்த குருராஜர், அவனது அறிவுத் திறமையைப் பார்த்து மகிழ்ந்தார். சரஸ்வதி கடாட்சம் நிரம்பப் பெற்றிருந்த வெங்கடநாதனுக்கு, "சரஸ்வதி" என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். இல்லறத்தில் இறங்கிய பின்னரும், இரை தேடலைவிட, இறைதேடலே பிடித்திருந்தது வெங்கடநாதனுக்கு. அதனால், ஏற்ற குருவைத் தேடி அலைந்தவன், கும்பகோணத்திற்குச் சென்றான். அங்கே, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் எனும் மத்வ மகானைக் கண்டான். அவரே தமக்கு ஏற்ற குரு எனக் கொண்டான்.


ஒளி இருக்கும் திசை நாடி, செடி வளைந்து செல்வதுபோல், ஞானஒளி நிறைந்திருந்த வெங்கடநாதன் வந்தது முதல், அவன்மேல் தனி அன்பு காட்டினார், சுதீந்திரர். அதுவே, மற்ற சீடர்களின் பொறாமை விதைக்கு உரமிட்டது. அதனால், எப்போதும் உறங்குகிறான் வெங்கடநாதன் என்று, சுதீந்திரரிடம் பழி கூறினர்.


கோள் மூட்டியவர்களின் வார்த்தைகளின் உண்மை அறிய அன்று இரவு, வெங்கடநாதன் என்ன செய்கிறான் எனப் பார்க்கப் போனார், குருதேவர். அங்கே, பழைய ஓலைகளை தீமூட்டி எரித்து, அந்த வெளிச்சத்தில் எதையோ எழுதிவிட்டு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் வெங்கடநாதன். அவன் விழித்துக் கொண்டு விடாதபடி, மெதுவாக அருகே சென்றார், சுதீந்திரர். எழுதிவைக்கப்பட்டிருந்த சுவடியை எடுத்துப் பார்த்தார்.


சுவடியில் வெங்கடநாதன் எழுதிவைத்திருந்ததைப் படித்ததுமே அவருக்குப் புரிந்து போனது, உறங்கிக் கொண்டிருக்கும் அவன், உலகை விழிப்புறச் செய்யப் பிறந்தவன் என்பது. அன்போடு தன் போர்வையை அவனுக்குப் போர்த்திவிட்டுப் போனார்.
விடிந்தது. விழித்தெழுந்த வெங்கடநாதன், திடுக்கிட்டான். "தான் எழுதிவைத்த சுவடியைக் காணவில்லை... அதைவிட அதிர்ச்சி, குருநாதரின் போர்வை, தன்மீது போர்த்தப்பட்டுள்ளது...!"


பதட்டத்தோடு சென்று, குருநாதரிடம் சொன்னான் வெங்கடநாதன். தாமே அவற்றைச் செய்ததாகச் சொன்னார், சுதீந்திரர். அதோடு, மற்ற சீடர்களுக்கும் அவனைப்பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினார். வெங்கடநாதன் தங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை உணர்ந்து தலைகுனிந்தார்கள் அவர்கள்.


கற்க வேண்டியவற்றை கசடறக் கற்றுத் தேர்ந்த வெங்கடநாதன், இல்லறத்தை நல்லறமாக நடத்த எண்ணி, குருவிடம் அனுமதி பெற்று புவனகிரிக்குத் திரும்பினான். மனைவியுடனான மகிழ்வான வாழ்வின் பயனாக ஆண்மகவு ஒன்று பிறந்தது வெங்கடநாதனுக்கு.
தொடர்ந்த வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவித்த வெங்கடநாதன், குரு சுதீந்திரரையே தேடிப்போய் வழிகேட்டான். பிறரிடம் பொருள் கேட்டுத் தேடிப் போக வழி தெரியாத அவன் நிலை உணர்ந்து, போதுமான பணம் கொடுத்து அனுப்பினார் குருதேவர். அதேசமயம், அவர் உள்மனம் ஒன்றைச் சொன்னது.


"வெங்கடநாதன், எனக்குப்பின் மத்வ பீடத்தை அலங்கரிக்க வேண்டியவன்!" உள்ளம் சொன்னதை மறைத்துக் கொண்டு, உவகையோடு அவனை ஊருக்குச் செல்ல அனுமதித்தார் சுதீந்திரர்.


சிலகாலம் சென்றது... சுதீந்திரரின் உடல்நலம் குன்றியது. தம் சீடர்களை அழைத்து, ""எனக்குப்பின் இந்த பீடத்திற்கு தலைமை வகிக்கும் தகுதி, வெங்கடநாதனுக்கு மட்டுமே உள்ளது. அவனை அழைத்து வாருங்கள்!"" என்றார் சுதீந்திரர்.


கும்பகோணம் வந்து குருதேவரைப் பணிந்த வெங்கடநாதன், துறவறம் ஏற்க மறுத்தான். பாசம், பந்தம் எனும் கட்டுகள் தன்னைப் பிணைத்திருப்பதாகச் சொன்னான்.அப்போதைக்கு அதனை ஏற்று, வெங்கடநாதனைத் திருப்பி அனுப்பினார், சுதீந்திரர். ஆனால், அவருக்கு நம்பிக்கை இருந்தது_வெங்கடநாதன் நிச்சயம் திரும்பிவந்து சந்நியாசம் ஏற்பான் என்று. அதனால், யாதவேந்திரர் என்ற சீடரிடம் தலைமைப் பொறுப்பை சிலகாலம் ஒப்படைத்தார்.


சுதீந்திரரின் நம்பிக்கை சீக்கிரமே பலித்தது. மீண்டும் சுதீந்திரரின் உடல் நலம் பாதிக்கப்பட, இப்போதும் வெங்கடநாதன் அழைத்து வரப்பட்டான். இந்தமுறை சந்நியாசம் ஏற்க, அவன் மறுக்காமல் சம்மதித்தான். அதேசமயம், மகனுக்குத் தந்தை ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருவதாகக் கூறி குருவிடம் அனுமதி பெற்றுத் திரும்பினான்.


விரைவிலேயே, தன் மகனுக்கு உபநயனம் செய்துவைத்துவிட்டு, இல்லாளிடமும் சொல்லாமல் வந்து சந்நியாசம் பெற்ற வெங்கடநாதனுக்கு, "ராகவேந்திர தீர்த்தர்" என்று தீட்சா நாமம் சூட்டப்பட்டது.


கரம் பிடித்த கணவன், சந்நியாசம் பெற்றுவிட்டார் என்பதை அறிந்த சரஸ்வதி, வாழ்வை வெறுத்து, கிணற்றில் குதித்தாள். பேயுருவாகி கணவரைத் தேடிப்போனாள்.


தன்னை நெருங்க முடியாமல் தவிக்கும் மனைவி சரஸ்வதியின் ஆவியைக் கண்ட ராகவேந்திரர், அவள் அவதியைப் போக்க மனம் கொண்டார். புனித நீரை அவள் மீது தெளித்து, புண்ணிய லோகம் செல்ல வழி செய்தார். அதோடு, அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்பட வேண்டும் என்றும் நியமம் செய்தார்.


சுதீந்திரரின் சீடராக இருந்தபோதே, தமது ஞானஅறிவு, பூவின் மணம்போல் பரிமளிப்பதை உணர்த்தி பரிமளாச்சாரியார் என அழைக்கப்பட்ட ராகவேந்திரர், குருவின் மறைவுக்குப்பின் தலைமை ஏற்றபோது, மேலும் அதனை நிரூபித்தார்.


மத்வ பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற சில ஆண்டுகளுக்குப்பின், தீர்த்த யாத்திரை புறப்பட்டார் ராகவேந்திரர். உடுப்பி, பண்டரி புரம், கொல்லாபுரம், கர்நூல் என அவர் பாதம் பதித்த தலங்கள் யாவும் புண்ணியத் தலங்களாயின. அவரது பயண வேகத்தை விடவும் வேகமாக, அவரது ஞானமும், அறிவும், உயர்வும், பெருமையும் எங்கும் பரவியது.


புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதாவானி எனும் ஆதோனிக்குச் சென்றார், ராகவேந்திரர். அங்கே அநாதைச் சிறுவன் ஒருவன் தன் சோகத்தினை அவரிடம் சொன்னான். அவன் பெயரைக் கேட்ட ராகவேந்திரர், ""வெங்கண்ணா, இனி உனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் என்னை நினைத்துக்கொள்... உயர்வடைவாய்!"" என்று சொல்லிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார்.


சில மாதங்களுக்குப் பின், அந்த வழியே வந்த ஹைதராபாத் நவாப், தனக்கு வந்த கடிதம் ஒன்றை வெங்கண்ணாவிடம் தந்து படிக்கச் சொன்னார். படிப்பறிவில்லாத வெங்கண்ணா, ராகவேந்திரரை மனதால் நினைத்தான். மறுகணம், ""மன்னா, இன்னும் சில நாட்களில் உங்கள் ஆட்சியின் கீழ் மேலும் சில நாடுகள் வரப் போவதாக இதில் எழுதியுள்ளது!"" என்று கடிதத்தைப் படித்துச் சொல்ல முடிந்தது அவனால்... நவாப் மகிழ்ந்தார். வெங்கண்ணாவை அவ்வூரின் திவானாக நியமித்தார்.


"ஒருமுறை நினைத்ததற்கே இத்துணை உயர்வா...!" ராகவேந்திரரின் திருநாம மகிமையை வியந்த வெங்கண்ணா, அப்போதுமுதல் தன் சுவாசமாகவே அவரது திருநாமத்தை நினைத்தான்.


செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ராகவேந்திரரைப் பின்தொடர்ந்தார்கள். பொதுவாக, மகான்கள் மட்டுமே மகிமைகளைப் புரிவார்கள். ஆனால், ராகவேந்திரரோ, தான் மட்டுமல்ல, தன் சீடர்கள், தன் பக்தர்களும்கூட மகிமைமிக்கவர்களே என்பதை பல்வேறு சமயங்களில் உணர்த்தினார். அவரது காஷாய ஆடைகள், அவர் கைப்பட்ட அட்சதை, அவர் தரும் பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின.


ராகவேந்திரர், தமது திருத்தல யாத்திரைக்கு இடையிடையே, வியாசராஜரின் சந்திரிகைக்கு "பிரகாசம்" எனும் உரை; தந்திர தீபிகை எனும் நூலுக்கு "நியாய முக்தாவளி" எனும் உரை என்பதுபோல் பல நூல்களை எழுதினார்.


வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்த ராகவேந்திரர், வேதாந்த உலகுக்கும், கல்விக்கும், மத்வ சித்தாந்தத்திற்கும் உதவும்படி ஏராளமான கிரந்தங்களை இயற்றினார்.


"புதிது புதிதாக எழுதவேண்டும்; பழைய நூல்களுக்கு புதியதாக அதுவும் எளியதாக வியாக்யானங்கள் (விளக்க உரைகள்) சொல்ல வேண்டும்" என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்போல், இரவு பகல் பாராமல் எழுதினார் பரிமளாச்சாரியார். அவரது நூல்களும் பரிமளம் மிக்கவையாகவே திகழ்ந்தன.


ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.


""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.


""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.


""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!"" மூன்றாமவர் சொன்னார். "எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்... என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்... பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""


""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார். பல்வேறு இடங்களில் காலடி பதித்த பின்னர், மீண்டும் ஆதோனிக்கு வந்தார் ராகவேந்திரர். அவரது வருகையை அறிந்து பக்தியோடு ஓடிவந்து பணிவோடு வரவேற்றான் வெங்கண்ணா. அதோடு, பெருமைக்குரிய மகான் வந்திருப்பதாக நவாப்பிடமும் சொன்னார்.


ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.
புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.


நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. தன் செயலுக்காக வருந்திய நவாப், மன்னிக்கும்படி வேண்டி மகானைப் பணிந்தார். ஆதோனி முழுவதையும் அவருக்கே அளிப்பதாகச் சொன்னார். ஆனால், மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.


துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார். அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.


கி.பி. 1671_ம் ஆண்டு (விரோதிகிருது) ஆவணிமாதம், கிருஷ்ணபட்சம், துவிதியை திதியுடன் கூடிய வியாழக்கிழமையன்று, தம் சீடர்களையழைத்த ராகவேந்திரர், தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போவதாகச் சொன்னார்.


அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தபின், சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்திருக்க, சீடர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்க, பிருந்தாவனப் பிரவேசம் செய்தார் ராகவேந்திர மகான்.


அவரது வாக்குப்படியே, இதோ, இன்றும் பிருந்தாவனத்தில் வாசம் செய்து கொண்டுதான் இருக்கிறார்... கற்பக விருட்சமாக, காமதேனுவாக, தன்னை வேண்டுவோர் வேண்டுவன யாவும் தருகிறார்.
திருமுல்லைவாயிலில் சரஸ்வதி நகரில்   
லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா ஸ்வாமி பிருந்தாவனம் கோயில்
http://www.srsmutt.org/
http://www.gururaghavendra1.org/
http://www.gururaghavendra.org/appana
http://www.gururaghavendra.in/mantralaya.htm

Friday, March 25, 2011

ஸ்ரீ பைரவர் மகிமை

ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை


நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை - ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க ,  உங்களுக்கு தேவையான ஆன்ம பலம்  அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ கால பைரவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம்அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம்   வரம்  பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி
2)ருரு பைரவர் + மகேஸ்வரி
3)உன்மத்த பைரவர் + வாராஹி
4)குரோதன பைரவர் +வைஷ்ணவி
5)சண்டபைரவர் + கவுமாரி
6)கபால பைரவர் + இந்திராணி
7)பீஷண பைரவர் + சாமுண்டி
8)சம்ஹார பைரவர் + சண்டிகா

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் :
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.


தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.


தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும். 

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?

 பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.


மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்


சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்

ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.

செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்

செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.


புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்


புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.

குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்


ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்

குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.


சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்


ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.


சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி


ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்


ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்

சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.


ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்

ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.


கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்


ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்


கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்.ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

கால பைரவ அஷ்டகம் 

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..          

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
 
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்

ஸ்ரீ பைரவ த்யானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:


26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை

24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை

24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை

23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை

22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை

21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை

19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை

19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை

18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை

17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை

15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை

14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை

14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை

எல்லாம் சரி! ஏன் சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டமியில் வழிபட வேண்டும்?

நமக்குச் செல்வச்செழிப்பைத் தருவது அஷ்ட லட்சுமிகளே! இவர்கள் வரம் தந்து கொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்.அப்படி குறையும் சக்தியை ஒவ்வொரு அஷ்டமியிலும்,அதுவும் தேய்பிறை அஷ்டமியிலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டே பெருக்கிவருகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட தேவரகசியம்!!!

மனிதர்களாகிய நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும்,சொர்ண ஆகர்ஷண பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

Wednesday, March 16, 2011

பங்குனி உத்திரம் - 19-03-2011

பங்குனி உத்திரம்       12-வது மாதமான பங்குனியில்,12-வது நட்சத்திரமான இந்த  உத்திர தினம் பன்னிரு கை வேலவனுக்கு மிகவும் உகந்த நாள். எல்லா முருகன் கோயில்களும் குறிப்பாக அறுபடை வீடுகளிலும் மிகப் பெரிய விழாவாக இத்திருநாள் கொண்டாடப்படும். பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும்,அலகு குத்தியும்,பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவார்கள். வாளமர் கோட்டையில் காவடி திருவிழா விசேஷமாக நடக்கும்.


 சிவபெருமான், பார்வதியின் திருமணம் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரமாகும். தன் தாய், தந்தையருக்கு திருமணம் நிகழ்ந்த நாளில், அவர்களைத் தரிசிக்க முருகப்பெருமான் வருவார். இதனால், இந்நாள் சிவவழிபாட்டிற்கும், அவரது அம்சமான முருகப்பெருமானை வழிபடுவதற்கும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வேண்டி விரதமிருக்கலாம். சிவன், பெருமாளின் பிள்ளையாக ஐயப்பன் அவதரித்த நாளும் இதுவே. இந்நாளில் சாஸ்தா, ஐயப்பன் கோயில்களில் விசேஷ வழிபாடுகளுடன் விழா நடக்கும்.
 ராமபிரான், சீதையின் திருமணம் நிகழ்ந்த நாளும் இதுவே ஆகும். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தாயாரின், அவதார தின விழாவும் இந்நாளிலேயே நடக்கும்.
மனிதனாய் பிறந்த கிருஷ்ண பரமாத்மா, லட்சுமியான சீதாதேவியை ராமன் என்ற பெயர் ஏற்று திருமணம் செய்து கொண்டார். இந்த இனிய திருமணமும் இன்றே நிகழ்ந்தது. பார்வதிதேவி மீனாட்சி என்ற பெயரில் பூமியில் பிறந்து, தன் பக்தியால் இறைவனை மணமகனாக அடைந்தாள். அந்த இனிய நாளும் பங்குனி உத்திர நன்னாள்தான்.

இவையெல்லாம் கூட பங்குனி உத்திரத்தின்போது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால், தேவலோகத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் நடந்த திருமணம் இதே நாளில் நடந்ததாகக் கருதப்பட்டு, முருகன் கோயில்களில் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. மனிதனாய் பிறப்பவன் தெய்வ நிலைக்கு உயர வேண்டும். அவன் இறைவனுக்குரிய கல்யாண குணங்களுடன் வாழ வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது. கிராமங்களில் சாஸ்தாவின் அம்சமான அய்யனாருக்கு விழா எடுக்கப்படுகிறது.

வழிபடும் முறை:

 பங்குனி உத்திரத்தன்று பகலில் ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் இருந்து, முருகனை வேண்டி விரதமிருந்து மாலையில் முருகனை வழிபட்டு, விரதத்தை பூர்த்தி செய்யலாம். தவிர, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமி, தாயாரையும், ஐயப்பன் மற்றும் கிராமதேவதையாக உள்ள சாஸ்தா கோயில்களுக்கும் சென்று வரலாம்.

பலன்:


மனமுருக பிரார்த்தித்தால் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதே இந்த அனைத்து வழிபாடுகளின் தாத்பர்யமாக இருக்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனி உத்திர தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதும்,இல்லாதவர்களுக்கு தான,தர்மங்கள்,அன்னதான்ம் செய்வது,தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்ற நற்காரியங்கள் செய்வதும் மிகவும் விசேஷமாக கூற்ப்படுகிற்து.அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து,நற்செயல்கள் செய்வது எல்லா தடைகள்,தடங்கல்கள், துன்பங்கள்,இடர்ப்பாடுகளை நீக்கி வாழ்வில் வளமும் நலமும் சேர்த்து சகல ஜஸ்வர்யங்களையும் தரும்.

 பங்குனி உத்திர விரதம் இருப்பதால் திருமணத்தடை நீங்கும். தம்பதியர் ஒற்றுமையாக இருப்பர். சிறந்த குழந்தைகள் பிறப்பர்.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர். அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.
அதாவது பார்வதி – பரமேஸ்வரன், தெய்வயானை – முருகன், ஆண்டாள் – ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது. வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

http://www.tamilhindu.net/t706-topic

http://groups.google.com/group/palsuvai/browse_thread/thread/e58a00e9b006b377