Tuesday, October 5, 2010

நவராத்திரி ஒன்பது நாள் பூஜைகள், அலங்காரங்கள், நைவேத்தியங்கள்!

நவராத்திரி ஒன்பது நாள் பூஜைகள், அலங்காரங்கள், நைவேத்தியங்கள்!





நல்வரம் தந்து அருள்!

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி புரியும் பாதாம் புயமலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி! புராணி! திரிபுவனேசுவரி! மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி! வராகி! எழில் வளர்திருக்கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

- அபிராமி அந்தாதி

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது மரபு. முதல் நாளன்று அசுரர்களாகிய மது- கைடபரை சம்ஹரிக்க உதவிய அம்பிகையை, அபயம்- வரதம், புத்தகம், அட்ச மாலையுடன் திகழும் துர்கையாக அலங்கரிக்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் ஒன்பது விதமான பெண்குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும் என்கிறது தேவி பாகவதம்.இந்தக் குழந்தைகள், 2 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதல் நாளன்று 2 வயது குழந்தையை 'குமாரி'யாக பாவித்து வணங்க வேண்டும். இதனால் ஆயுளும் செல்வமும் பெருகும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிற பூக்களை சமர்ப்பித்து அம்பாளை வழிபட வேண்டும். இதன்படி, செவ்வரளி, சாமந்திப் பூக்களால் தேவியை அர்ச்சித்து வணங்கலாம்.

நைவேத்தியம்

காலை எலுமிச்சை சாதம்: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். சாதத்தை பாத்திரத்தில் போட்டு தாளித்தவற்றை கொட்டி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை பாசிப்பயறு சுண்டல்: பாசிப்பயறை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊறியதும் வேகவைக்க வேண்டும். பிறகு, வெல்லப் பாகு காய்ச்சி, இதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கினால் சுண்டல் ரெடி.


--------------------------------------------------------------------------------


எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டில் இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள்ளளவும் முடியாதுநின் உனது அம்மருவும் கடைக்கண்ணருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து வனச நிகர் நின் பாதம் நம்பினேன் வந்தருள்செய்! வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே

- அபிராமி அந்தாதி

இரண்டாம் நாளன்று மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரியின் வடிவில் அலங்கரிப்பர்.

இந்த நாளில் 3 வயதுள்ள பெண் குழந்தையை, 'திரிமூர்த்தி' யாக பாவித்து வழிபடுவது நலம். இதனால் தன-தானியங்கள் பெருகும்.

2-ஆம் நாளன்றும் அம்பாளுக்கு மஞ்சள் அல்லது செந்நிற மலர்களை அர்ப்பணிக்கலாம். சிவப்பு நிறக் கொன்றை உகந்தது.

நைவேத்தியம்

காலை எள்ளு சாதம்: எள்ளை எண்ணெயில்லாமல் வறுக்கவும். பிறகு, எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து, எள் சேர்த்து நைஸாக பொடிக்கவும். சாதத்தில் பொடித்த எள் பொடி, உப்பைத் தூவி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.

மாலை மொச்சை மசாலா சுண்டல்: முதல் நாளே ஊற வைத்த மொச்சையுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, தனியா, உப்பு கலந்து அரைத்த விழுதை சேர்த்து, வேகவைத்து இறக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, எண்ணெயில் கடுகு-கறிவேப்பிலை தாளிக்கவும்.


--------------------------------------------------------------------------------


மஹா தேவீம் மஹா சக்திம் பவானீம் பவ வல்லபாம் பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோக மாதரம்

- ஸ்ரீ தேவி அஷ்டகம்

பொருள்: தேவியே! மஹாதேவனின் மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலையைப் போக்குபவளும், உலகங்களுக்குத் தாயுமான தங்களை வணங்குகிறேன்.

மூன்றாம் நாளன்று மகிஷாசுர வதம் செய்த தேவியை, சூலம் ஏந்தியவளாக, மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலமாக அலங்கரித்து வழிபட வேண்டும். இந்தக் கோலத்தில் இருக்கும் தேவியை கல்யாணி என்றும் சொல்வர்.

நவராத்திரி- திருதியை தினத்தில் அதாவது 3-ஆம் திருநாளன்று 4 வயதுள்ள பெண் குழந்தையை 'கல்யாணி' என்ற திருநாமத்தால் வழிபட வேண்டும். இதனால் வித்தைகளில் வெற்றி, அரச மரியாதை உண்டாகும்.

செம்பருத்தி, தாமரை மலர்கள் அர்ப்பணித்தும், இந்த மலர்களால் அர்ச்சித்தும் அம்பாளை வணங்குவது நலம்.

நைவேத்தியம்

காலை தயிர் சாதம்: சாதத்தை குழைவாக வடித்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தாளித்துக் கொட்டி, தயிரை விட்டு கலக்கவும்.

மாலை காராமணி கார சுண்டல்: காராமணியில் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். இதையடுத்து தண்ணீரை வடித்த பிறகு, இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துக் கலக்கவும்.


--------------------------------------------------------------------------------


தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம் அஸ்மின்ன கிஞ்சன விஹங்கசிசௌவிஷண்ணே துஷ்கர்ம கர்மம் அபநீய சிராய தூரம் நாராயண ப்ரணயினீ நயனாம்பு வாஹ:

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: கருணையாகிய அனுகூலக் காற்றுடன் கூடிய மகாலட்சுமி யின் கண்களாகிய நீருண்ட மேகம்... தரித்திரத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சிறிய சாதகப் பறவையிடம், வெகு நாட்களாக ஏற்பட்ட பாவம் எனும் தாபம் போக்கி, பொருள் மழையை அருளட்டும்.

4-ஆம் நாளன்று, ஜயதுர்கை திருக்கோலம். சிங்காதனத்தில்... இடையூறுகள் நீங்கிய தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங் களை ஏற்றருளும் கோலத்தில் உள்ள இவளை, ரோகிணி என்பர்.

இன்று ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை, 'ரோகிணி' என்ற திருநாமத்துடன் வழிபட வேண்டும். இதனால் ரோகங்கள் நீங்கும்.

நவராத்திரியின் 4,5,6-ஆம் நாட்களில் செந்நிற மலர்களால் தேவி பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அதன்படி சதுர்த்தி நாளில் செந்தாமரை கொண்டு அம்மன் வழிபாடுகளைச் செய்யலாம்.

நைவேத்தியம்

காலை சர்க்கரை பொங்கல்: சிறிது நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, 6 கப் தண்ணீரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால்விட்டு, கொதித்ததும் கெட்டியாக வரும்போது தீயைக் குறைத்து, தயாராக வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து, சாதத்தை போட்டு கிளறவும். நடுநடுவே நெய் சேர்க்கவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

மாலை பட்டாணி சுண்டல்: நீரில் நன்கு ஊறிய பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பட்டாணி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தேங்காய், மாங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.


--------------------------------------------------------------------------------


கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஷூ ஸம்ஸ்திதாயை தஸ்யை நமஸ் த்ரிபுவனைக குரோஸ் தருண்யை

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: சரஸ்வதிதேவி என்றும், கருட வாகனனின் மனைவியாகிய மகாலட்சுமி என்றும், சாகம்பரியாகிய பூமாதேவி என்றும் பார்வதி என்றும் பிரசித்தி பெற்று, படைத்தல்- காத்தல்- ஒடுக்கல் ஆகிய விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூன்று உலகங்களுக்கும் குருவாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனுடைய பத்தினியானவளுமான ஸ்ரீமகாலட்சுமிக்கு நமஸ்காரம்.

5-ஆம் நாளன்று அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் அம்பாளை அலங்காரம் செய்வர். சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த துர்காதேவி, சும்பன் எனும் அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவன் தெரிவிக்கும் தகவலை செவிமடுப்பவளாகக் காட்சி தருவாள்.

இன்று 6 வயதுள்ள பெண் குழந்தையை, 'காளிகா' என்ற திருநாமத்தில் அழைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பாளை, காளிகாதேவியாக தியானித்து, மனமுருக வழிபடுவதால் பயம் நீங்கும். இடையறாது தொல்லைகள் தந்து வந்த எதிரிகள் அடங்குவர்; பகை ஒழியும்.

இந்நாளில் செவ்வரளி மலர் மாலை அணிவித்தும், இந்த மலர்களால் அம்பாளின் திருநாமம் போற்றிச் சொல்லி அர்ச்சித்தும் வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை பால் சாதம்: பசும்பாலை சுண்ட காய்ச்சவும். சாதத்தை குழைய வேக விடவும். இதில் காய்ச்சிய பாலை விட்டு, சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.

மாலை கார்ன் வெஜிடபிள் சுண்டல்: சோளத்தில் உப்பு சேர்த்து, வேக வைத்து இறக்கி, தண்ணீரை வடிக்கவும். கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கலக்கவும்.


--------------------------------------------------------------------------------


ஸேவே தேவி த்ரிதச மஹிளா மௌளிமாலார்ச்சிதம் தே ஸித்திக்ஷேத்ரம் சமிதவிபதாம் ஸம்பதாம் பாதபத்மம் யஸ்மின்னீஷந்நமிதசிரஸோ யாபயித்வா சரீரம் வர்த்திஷ்யந்தே விதமஸி பதே வாஸூதேவஸ்ய தன்யா:

- ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி

கருத்து: தேவியே... தேவப் பெண்களின் சிரசுகளின் வரிசைகளால் அர்ச்சிக்கப் பட்டதும், குறையில்லா ஐஸ்வரியங்களுக்கு உற்பத்தி ஸ்தானமுமாகிய தங்களின் பாதக் கமலத்தில் தலை வணங்கியவர்களும், பாக்கியம் பெற்றவராக சரீரம் விலகிய பின் வைகுண்டத்தில் நித்யவாசம் செய்வார்களோ... அந்த பாத கமலத்தை சேவிக்கிறேன்.

6-வது நாளில் சர்ப்பராஜ (பாம்பு) ஆசனத்தில் சண்டிகாதேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் அலங்கரிப்பர். அட்சமாலை, கபாலம், தாமரை, தங்கக் கலசம் ஆகியவற்றை ஏந்தியவண்ணம் திகழும் தேவியின் இந்த வடிவம், தும்ரலோசனனை வதம் செய்த கோலமாம்.

நவராத்திரியில் சஷ்டி தினத்தில் ஏழு வயதுள்ள பெண் குழந்தையை, 'சண்டிகா' எனும் திருநாமத்துடன் வழிபடுவதால் செல்வம் சேரும்.

இந்த தினத்தில் செந்தாமரை, செம்பருத்தி, ரோஜா ஆகிய மலர்களால் அர்ச்சித்தும், மாலை அணிவித்தும் சக்தியை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை கல்கண்டு சாதம்: ஒரு டீஸ்பூன் நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை வறுத்து வெந்நீரை விட்டு நன்றாக அலசவும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து, களைந்த அரிசியைப் போட்டு வேகவிடவும். கடாயில் கல்கண்டைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதில் சாதம், பருப்பைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். பிறகு, சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை ராஜ்மா சுண்டல்: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, உப்பு சேர்த்து, வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு எண்ணெயில் கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து, இதனுடன் வேகவைத்த ராஜ்மாவை கலந்து இறக்கவும்.


--------------------------------------------------------------------------------


கலைமகளே அருள்வாய் கற்பனைத் தேன் இதழாள்- சுவைக் காவியம் எனும் மணிக் கொங்கையினாள் சிற்பம் முதற் கலைகள்- பல தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள் சொற்படு நயம் அறிவாள்- இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார் விற்பனத் தமிழ்ப் புலவோர்- அந்த மேலவர் நாவெனும் மலர்ப் பதத்தாள்

- மகாகவி பாரதியார்

நவராத்திரியின் 7-ஆம் நாளன்று தேவியை, தங்கமயமான பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவியாக அலங்கரிக்க வேண்டும். ஒரு காலை மடித்து வைத்து, மற்றொரு காலை தாமரை மலரில் ஊன்றியிருப்பது போல் இந்த தேவியை அலங்கரிப்பது சிறப்பு.

இன்று 8 வயதுள்ள பெண் குழந்தையை, சாம்பவியாக பூஜிக்க வேண்டும். இதனால் சௌபாக்கியங்களும் அரச போகமும் கிடைக்கும்.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவிக்கு உரியது என்பது பொது நியதி. இந்த நாட்களில் வெண்ணிற மலர்களை அம்பாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 7-ஆம் நாளன்று மல்லிகையால் அர்ச்சித்து அம்பாளை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை வெண் பொங்கல்: அரிசி, பயத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மாலை கடலைப்பருப்பு புதினா சுண்டல்: கடலைப்பருப்பை உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும்.


--------------------------------------------------------------------------------


புத்தகத் துள்ளுறை மாதே! பூவில் அமர்ந்துறை வாழ்வே! வித்தகப் பெண்பிள்ளை நங்காய்! வேதப் பொருளுக்கிறைவி! எக்காலும் உன்னைத் தொழுவோம் எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்!

நவராத்திரியின் 8-ஆம் நாளன்று... ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும்.

அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய- வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.

இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் கொடூரமான பகைவர்களும் அழிவார்கள். செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும்.

இன்று முல்லை மலர்களால் ஆன மாலை அணிவித்தும், வெண் தாமரை மலர்களால் அலங்கரித்தும் தேவியை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை தேங்காய் சாதம்: எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் தேங்காய் துருவலைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வறுத்து சாதத்துடன் கலக்கவும். இதன் பிறகு நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்க்க வேண்டும்.

மாலை கொண்டக்கடலை சுண்டல்: சென்னாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்த கொண்டக்கடலை, அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி மிளகுத்தூள் தூவவும்.


--------------------------------------------------------------------------------


நங்காய் நங்காய் நமோஸ்து! ஞானக் கொழுந்தே நமோஸ்து! கல்விக் கரசி நமோஸ்து! கணக்கறி தேவி நமோஸ்து! சொல்லும் பொருளே நமோஸ்து! சூட்சுமரூபி நமோஸ்து!

9-ஆம் நாளன்று சும்ப- நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவர்.

இன்று 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டுமாம். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஒன்பது நாட்களும்... பூஜிக்க வேண்டிய பெண் குழந்தைகளை ஆசனத்தில் அமர்த்தி, அவர்களின் பாதங்களைக் கழுவி, பூக்கள் தூவி வழிபடுவதுடன், பிரார்த்தனைகளை மனதில் சொல்லியபடி வணங்க

வேண்டும். இவர்களுக்கு, நம் வசதிக்கு தகுந்தபடி ஆடை- அணிகலன்கள் அளிப்பதால் மிகுந்த நன்மை உண்டு.

இன்று அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களை அம்பாளுக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை வெல்ல புட்டு: புழுங்கலரிசியை சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், நீர் சேர்த்து தயிர் சாதம் போல் தளர கலந்து, துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் தேய்த்துக் கொள்ளவும். நெய்யில் தேங்காய், முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து முத்துப் பாகு காய்ச்சவும். இதில் உதிர்த்த ரவை, தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி, நெய் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.

மாலை பாசிப்பருப்பு சுண்டல்: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, இட்லி தட்டில் பரப்பி, வேக வைக்கவும். கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு, வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

2 comments:

  1. Very nice one. You can upload your programme details also in this. Visit my blog for Child Care Leave for male. Represent. Ask your friends also to represent.
    Ramnath
    My blog is: onlyparity.blogspot.com

    ReplyDelete