| ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள். | |
No comments:
Post a Comment