Monday, October 4, 2010

NAVARATHRI - An Introduction

நவராத்ரி

ஸ்ரீ ராமனுக்கு இராவணனை சம்ஹாரம் செய்யும் பூரண வலிமையை கொடுக்கும் ‘ஸ்ரீ பஞ்ச தசாக்ஷரி’ என்ற ஸ்ரீ வித்யா மகா மந்திரத்தை வலது காதிலே உபதேசிக்கப்பட்டதால்,ஸ்ரீ ராமன், தேவி பக்தனாக மாறிப் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை முதல் நவமி முடிய ஒளியான ஒன்பது நாட்களிலும் இரவில் நியம நிஷ்டையுடன் பூஜை செய்தமையால் சிறந்த நவராத்ரியாக ஒளிர்விட்டது. இராமனும் அன்னையை வழிபட்டு தசக்ரீவனை சம்ஹாரம் செய்தார். தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதா ஸகஸ்ரநாமம் , அபிராமி அந்தாதி முதலான சக்தி வாய்ந்த நூல்களைப் படித்து அன்னையின் அருளைப் பெறுவோமாக!…….வசுதாமுரளி
கடும் வெயில் காலமும் – கடும் மழைக் காலமும் எமனின் இரண்டு கோரைப்பற்கள் என ஞான நூல்கள் சொல்கின்றன. இந்த இரண்டு
காலத்திலும் பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். உடலை பாதிக்கும். அதனால் உள்ளமும் பாதிப்பு அடையும். இந்த இரு வகையான பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பவள் அம்பிகை. அதனால்தான் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாம் ‘நவராத்ரி’ என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபடுகிறோம்.
தேவிபாகவதம்:….
தக்ஷப் பிரஜாபதியின் மகள் தாட்சாயணி, தக்ஷன் விருப்பத்துக்கு மாறாக ஈசனை மணக்கிறாள். அதனால் தக்ஷன் ஈஸ்வரன்பால் வெறுப்புற்றான், தான் செய்யும் யாகத்துக்கு ஈசுவரனை அழைக்கவில்லை. எனினும் தாட்சாயணி கணவருக்காக நியாயம்
கேட்டு அங்கே சென்றாள். தன்னையும் தன் கணவரையும் தந்தை நிந்திப்பதைக் கேட்டு மனம் பொறாது அங்கேயே உயிர்த்தியாகம் செய்தாள். இதனால் கோபம் அடைந்த சிவன் யாகத்தை அழித்து, தக்ஷனையும் சிரச்சேதம் செய்தார். உயிர் நீத்த தேவியின் உடலைத் தோள்மீது போட்டுக்கொண்டு திரியலானார். மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அந்தப் புனித உடலைத் துண்டுகளாகும்படிச் செய்து சிவபிரானின் தாபத்தைத் தணித்தார். அப்படித் துண்டுகளாகிய தேவியின் உடல் பல இடங்களிலும் விழுந்தது. அப்படி மண்ணில் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் எனப்போற்றப்படுகின்றன.
சாக்தபீடங்கள் நான்கு , ஏழு , எட்டு , பத்து, பதினெட்டு, நாற்பத்து இரண்டு, ஐம்பது, ஐம்பத்து இரண்டு, நூற்றுஎட்டு என்று பல விதமாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக அன்னையின் தேகம் அக்ஷரமயமானதால் அக்ஷரங்களின் எண்ணிக்கைப்படி ஐம்பத்தி ஒன்று எனச் சொல்லப்படுகின்றன. இந்த சாக்த பீடங்களும்,மற்ற தேவிக்ஷேத்ரங்களும் சேர்ந்து பாரதநாட்டைப் புண்ணிய பூமி யாக்குகின்றன.
முப்பெரும் தேவியர்:
நவராத்ரியின் போது, முதல் மூன்று நாட்கள் ‘ துர்கை’ வழிபாடாகவும், இரண்டாவது மூன்று நாட்கள் ‘லட்சுமி‘ வழிபாடாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் ‘சரஸ்வதி’ வழிபாடாகவும் செய்யப்படுகிறது. இந்த மூன்று சம்ஹாரத்தில் ஆரம்பத்தில் வரக்கூடிய மது-கைடப சம்ஹாரத்தில் வரக்கூடியவள் துர்க்கையாகவும்,அடுத்து மஹிஷனை மாய்த்தவள் மஹாலட்சுமி ஆகவும்,மூன்றாவது கதையில் வரும் சும்ப-நிசும்பனை சம்ஹாரம் செய்தவள் மஹாசரஸ்வதியாகவும் தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது .
தேவி மகாத்மியம் :
தேவி மூன்று வடிவுடையவள் அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் காளிரூபம், லக்ஷ்மீ ரூபம், ஸரஸ்வதி ரூபம்.
தேவர்கள் செய்த கடும் தவத்தினால், தன் சக்தி சேனைகளுடன் சென்று, சண்டாமுண்டன், ரக்த பீஜன், சும்ப-நிசும்பன், மகிஷாசுரன் போன்ற அசுர அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே “தேவி மகாத்மியம்” எனப்படுவது.தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவது மாகவோ நவராத்ரி நாட்களில் படிப்பவர்கள், தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும், தீர’ தேவிமகாத்மிய’ பாராயணமே சிறந்த வழி.
கொலு: ப்ரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜன் முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்து பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக’ கொலு’ என்று புரட்டாசி அமாவாசையன்று, நல்ல சுப நேரத்தில் வைப்பதாக ஐதீகம்.
கொலு வைப்பது:
‘அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!’ என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள்.
படி தன்மை பொம்மைகள்
கீழிருந்து 1 ஓரறிவு செடி,கொடி,மரங்கள், பூங்கா……
2 இரண்டறிவு நத்தை,சங்கு,- மெள்ள ஊர்வன….
3 மூன்றறிவு எறும்பு - தரையில் ஊர்வன…
4 நான்கறிவு பறவை, வண்டு – பறப்பன
5 ஐந்தறிவு பசு போன்ற விலங்கினங்கள்
6 ஆறறிவு மனித பொம்மைகள்,செட்டியார்
7 மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர்,
8 தெய்வம் தசாவதாரம்
9 பூரண கும்பம் அம்பிகையின் திரு உருவம்
அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன
என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.
பன்பெயர் நாயகி : அம்பாள் அனேக அம்சங்களை உடையவள். யார் யார் எப்படி விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள். எங்கும் நிறைபொருளாகக் காணப் படும் போது அவள் பூரணி என்று அழைக்கப்படுகிறாள். சக்தி நிறைந்த வளாய், சர்வ வல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும்,மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள். முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி, வைஷ்ணவி, ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள்.சகுணப் பிரம்மம் அல்லது ஈசுவரனுக்கு ஒப்பாகும் போது துர்கை எனப் படுகிறாள். கால சொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள். வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும், தனதான்ய
வடி வெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி, ஜகதாத்ரியாகவும், பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள்.
துர்கா பூஜை : இமவானின் புத்ரியாக அவள் இறங்கி வரும் திருவிழாவே துர்கா பூஜைத்திருவிழாவாகப் போற்றப்படுகிறது. அப்படி அவள் வரும்போது லட்சுமி, ஸரஸ்வதி, கணேசன், கார்த்திகேயன் ஆகியோர் உடன் வருகிறார்கள். மனிதனின் நல் வாழ்வுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்ட சிறு சேனையின் தலைவியே அவள். அவளே அனைத்தும் ஒருங்கமைந்த சக்தி சொரூபம். செல்வத்தைப் பெருக்கும் சின்னமாக லக்ஷ்மி, கலைஞானங்கள் அளிக்க ஸரஸ்வதி, விக்னமின்றிச் செயல்பட கணபதி, ஆற்றலை வளர்க்க முருகன் இப்படி அம்பிகையின்
அம்சங்களாகவே இந்த நால்வரையும் பார்த்துத் தொகுத்து வழிபடுவதுதான் துர்கா பூஜை. நிறைவாழ்வின் பொலிவுகளை விளக்குகின்ற சக்தியாக அவை அமைந்துள்ளன.
நவராத்ரியின்போது செய்ய வேண்டிய நவ கன்னிகை பூஜை:

நவராத்ரி காலத்தில் ஒன்பது நாட்களும் விதிப்படி கன்னிகைகளை பூஜை செய்யவேண்டிய முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர்விரிவாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமான விதிகள்:
நாள் பெண்ணின் பெயர் பலன்
முதல் நாள் குமாரிகா-சுமார் 2 வயது தரித்திர நாசம்
2 வதுநாள் திரிமூர்த்தி – சுமார் 3 வயது தனதான்ய வளம்
3வது நாள் கல்யாணி – சுமார் 4 வயது பகை ஒழிதல்
4வது நாள் ரோகிணி – சுமார் 5 வயது கல்வி வளர்ச்சி
5வது நாள் காளிகா – சுமார் 6 வயது துன்பம் நீங்குதல்
6வது நாள் சண்டிகா -சுமார் 7 வயது செல்வ வளர்ச்சி
7வது நாள் ஸாம்பவி -சுமார் 8 வயது க்ஷேம விருத்தி
8வது நாள் துர்கா -சுமார் 9 வயது பயம் நீங்குதல்
8வது நாள் சுபத்ரா- சுமார் 10 வயது ஸர்வ மங்களம்
உண்டாதல்
நவராத்ரி பூஜையின் விரிவான விளக்கங்களுக்கு ‘லிப்கோ‘வின் “நவராத்ரி பூஜை” நூலைக்காண்க…. 636
இந்தியாவில் நவராத்ரி: இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நவராத்ரி விழா ஒவ்வொரு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அதே போலக் கர்நாடகத்தில் தசராவென்றும்,தமிழ்நாட்டில் நவராத்ரி என்றும் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், சிற்பிகள், வித்வான்கள், தொழிலாளர்கள் என்று அனைவரையும் ஈடுபடுத்தும் மகோன்னத பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடு முழுவதும், எல்லாப் பிரிவினரையும் ஈடுபடுத்தும் தனிப்பெருமை நவராத்ரி விழாவிற்கு இருக்கிறது. மரப்பாச்சிகளால் ஆன கொலுவையே மைசூர் வாசிகள் நவராத்ரியில் வைத்து மகிழ்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் நவராத்ரி முதல் நாளன்று, சிறு மண்தொட்டிகளில் நவதான்யங்களைத் தூவி பாலிகை வளர்ப்பார்கள்.
நவராத்ரி ஒன்பது நாட்களும் தேவி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி, விஜயதசமியன்று பெண்கள், பாலிகையை ஆற்று நீரில் கரைத்துவிட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் கூத்தனூரில் உள்ள ஸரஸ்வதி கோயில் பிரபலமானது. இங்கு சரஸ்வதி பூஜையன்று அம்பாளின் பாதங்கள் வெளிமண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்வர். அன்று எல்லோரும் தேவியின் பாதங்களுக்கு மலர் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஹிமாச்சலத்திலுள்ள ‘குலு‘ என்னும் பகுதியில் உள்ள சிறிய கோயில்களிலிருந்து விக்ரஹங்கள் ஊர்வலமாக
கொண்டுவரப்பட்டு, ரகுநாத் ஜி மந்திர் முன்பு நவராத்ரி விழா நடத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பொது இடங்களில் கூட மகிஷாசுரமர்த்தினி திருவுருவம் வைக்கப்பட்டு, தசரா பூஜைகள் செய்யப்படுகின்றன. விஜயதசமி அன்று பூஜை செய்யப்பட்டு சிலைகள் ஊர்வலமாக வீதிகளில் உலாவந்து கடலில் கரைக்கப்படுகின்றன.
வடநாடுகளில் நவராத்ரி நாட்களில் ‘ ராம் லீலா‘ என்ற நிகழ்ச்சி பொது இடங்களில் நடக்கிறது. துர்கை மகிஷாசுரனை வென்ற நாள்
விஜயதசமி என்று கூறப்பட்டாலும், சில இடங்களில் ராமன் ராவணனை வதைத்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
வெளிநாட்டிலும் ஸரஸ்வதி வழிபாடு:
ஜப்பான் நாட்டில் ஸரஸ்வதியை’ பென்டன்’ என்றும் திபெத் நாட்டில் ஸரஸ்வதியை ‘யங்சன்ம’ என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள்
பாலித்தீவுப்பகுதியில்’கலுங்கன்’ என்று ஸரஸ்வதியைத் துதிக்கின்றனர்.
நவராத்ரியில் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்:
ஒன்பது நாட்களும் “வபனம்” (முடி நீக்குதல்) ஆகாது: மருந்துண்ணல் கூடாது.
பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்கவேண்டும்.
இரவில் பட்டினி இருத்தல் வேண்டும். ஒரு சிலர் பகலெல்லாம் நோன்பு இருந்து, இரவில் அன்னையின் வழிபாடு நிறைந்த பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இதுவும் ஏற்றதே!
இந்த ஒன்பது நாட்களிலும் பானகமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம். இக்காலத்தில் வீட்டிற்கு வரும் சுவாசினிகளை ஜன்ம விரோதியாக் இருந்தாலும் சக்திவடிவமாகவே பாவித்து தாம்பூலம் அளித்து அவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்தல் வேண்டும்.
தேவி பாகவதம், தேவிமகாத்மியம், செளந்தரியலஹரி, லலிதாஸகஸ்ரநாமம் முதலான ஸம்ஸ்க்ருத நூல்களும் அபிராமி அந்தாதி,அபயாம்பிகை சதகம் முதலான தமிழ் நூல்களும் அம்பாளின் பெருமைகளை உணர்த்துபவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூல்களைப் படித்து அம்பிகையின் அருளை பெறுவீர்களாக! மேலும் நவராத்ரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா அஷ்டோத்ரமும், ஸஹஸ்ரநாமமும்,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ர நாமமும், அடுத்த மூன்று நாட்கள் ஸரஸ்வதி அஷ்டோத்ரமும்,ஸஹஸ்ரநாமமும் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது பாராயணம் செய்து, நற்பலன்களைப் பெறுவோமாக!


முப்பெருந்தேவியர் அர்ச்சனை :

http://www.indusladies.com/forums/pujas-prayers-and-slokas/111202-a.html

1 comment:

  1. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நவ (9) கன்னிகை சன்னிதானம் எங்கே உள்ளது (சப்த - 7 கன்னிகை அல்ல)....

    ReplyDelete