Friday, October 28, 2011

ஓதி மலை முருகனின் அற்புதம்

“ஓதி மலை முருகனின் அற்புதம்”

  
 சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம் ஓதி மலை, இங்கே முருகன் கோவில் அமைந்துள்ளது. வறட்சியான பகுதி, மரங்கள் அதிகம் இருக்காது, இருக்கும் பெரும்பாலான மரங்களும் முள் மரங்களே. கோவில் 1650+100 செங்குத்தான படிக்கட்டுகளை கொண்டது, நகரத்து வயதானவர்கள் ஏற முடியாது, வயது குறைந்தவர்களே இதில் ஏற திணறி விடுவார்கள், உண்மையிலேயே மிக சிரமம் முதல் முறை எங்கும் உட்காராமல் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் நாக்கு தள்ளி முக்கால்வாசி முக்கி முக்கி போயும் வேறு வழி இல்லாமல் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சம் மறந்து பின்னால் சாய்ந்தாலும் பல்டி போட்டு விடுவோம், அவ்வளோ செங்குத்தான பகுதி. மிகைப்படுத்தி கூறவில்லை. நான் சபரி மலை சென்ற போது கூட இவ்வளோ சிரம படவில்லை. இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே போக முடியும்,வாகன பாதை கிடையாது.
கோவில் மிக எளிமையாக இருக்கும்,எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல். இந்த கோவிலுக்கு வரும் ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார் (படி ஏறி படி ஏறி திடமாக இருக்கிறார்) ஒரு சில நாட்கள் கோவிலிலேயே தங்கி விடுவார். அவர் எப்படி தான் ஏறி போய் பூசை செய்கிறாரோ !! நினைத்தாலே கண்ணை கட்டுது.எந்த வித ஆடம்பர அலங்காரமும் இல்லாமல் எளிமையான முருகன் சிலை, பார்க்கவே அற்புதம். இத்தனை உயர மலையிலும் ஒரு கிணறு உள்ளது. கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும் மேலே வந்ததும் ஒரு நிம்மதி கிடைக்கிறது.
விசயத்துக்கு வருகிறேன், என்னுடைய அக்கா இந்த கோவில் முருகன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள், இங்கே சென்று வேண்டினால் நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பிக்கை, அதை உண்மை ஆக்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன, எனவே எனக்கும் மிக ஆச்சர்யம். நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை நான் முழுமையாக நம்புபவன். கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. நடந்த ஒரு சில விஷயங்கள் என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
என் அக்காவின் கணவர் உறவினர் 4 பேருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கும் இந்த கோவில் சென்ற வந்த பிறகு குழந்தை பிறந்தது (நீண்ட காலமாக குழந்தை இல்லாமல்) மூவரின் நிலை எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் உண்மை. எனக்கு தெரிந்த மீதி இருவர் பற்றி கூறுகிறேன்
ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, பல மருத்துவர்களிடம் காண்பித்து விட்டார்கள் மருத்துவர்களும் ஆணின் விந்தணுவில் சரியான அளவு உயிரணு இல்லை,எனவே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார்கள், திருமணம் ஆகி 5 வருடம் ஆகி விட்டது. அனைவரும் கை விட்ட பிறகு அனைவருக்கும் நினைவு வருவது கடவுள் தானே. எனவே என் அக்காவின் விருப்பத்திற்காக இதையும் முயற்சி பண்ணலாமே என்று அவர்கள் கோவில் சென்று முருகனை வேண்டி வந்தார்கள், அடுத்த மாதமே அவர்கள் கருவுற்றார்கள், தற்போது குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள். இது நம்பவே முடியாத அதிசயம்.
இன்னொரு தம்பதி எனக்கு மிக நெருங்கிய உறவினர் திருமணம் ஆகி 20 வருடம் ஆகி விட்டது ஒரு முறை கருத்தரித்து அழிந்து விட்டது. பிறகு கருவுறவே இல்லை, அவரின் (ஆணின்) விந்தணுவில் உயிரணு இல்லை என்று கூறி விட்டார்கள். இவரும் இந்த கோவில் வந்து வேண்டி கொண்டார், இதற்காக பல விரதங்கள் பல வேண்டுதல்கள் என்று பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. பிறகு என் அக்காவின் ஆலோசனை படி (என் அக்கா மருத்துவர்) சென்னை கமலா மருத்தவரிடம் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் தற்போது கருத்தரித்துள்ளார்கள்.
இது அறிவியல் தான் இங்கே எங்கே கடவுள் வந்தார் என்றால் என்னிடம் பதில் இல்லை. 20 வருடம் குழந்தை இல்லாமல் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி பல நாட்கள் அழுது, மற்றவர்களின் பேச்சுகளை சமாளித்து இந்த நிலையை அடைந்தவர்களிடம் போய் இது கடவுள் செயல் அல்ல அறிவியல் என்று கூறினால் நம்மை அவர் என்ன கூறுவார் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. வெளியே இருந்து கூறுகிறவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம், கஷ்டபடுகிறவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். தற்போது கருவுற்று இருக்கிறார்கள், இன்னும் குழந்தை பிறக்கவில்லை, அவர்கள் நலமுடன் குழந்தை பெற அந்த முருகன் ஆசிவர்த்திப்பானாக (Updated: இவருக்கு குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள்).
இன்னொரு பெண், இவருக்கு திருமணமே ஆகவில்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் சரியான வரன் கிடைக்கவில்லை. என் திருமணத்திற்கு முன்பு இருந்து பார்க்கிறார்கள். தற்போது என் அக்கா கோவிலுக்கு சென்று வர கூறி, போய் வந்த பிறகு தற்போது நல்ல இடத்தில் வரன் கிடைத்துள்ளது.
கோவிலுக்கு போகாமல் இருந்தால் கடவுள் வரன் கொடுக்க வில்லை என்றால், அது என்ன கடவுள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. திருமணம் ஆகாமல் தள்ளி போவது எவ்வளோ பெரிய கொடுமை என்று அந்த நிலையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அதுவும் குறிப்பாக பெண்கள். அந்த நிலையில் இருப்பவர்கள் கடவுளிடம் உன்னை தேடி வந்தால் தான் கொடுப்பாயா என்றெல்லாம் கேக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.
நான் மூன்று முறை இதோடு சென்று வந்துள்ளேன் எனக்கும் பல நன்மைகள் நடந்ததாகவே கருதுகிறேன். என் பகுதியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஏன் கூறினேன் என்றால் இதை போல கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள், பல முயற்சிகளை செய்து இருப்பார்கள், கடைசியாக இதையும் ஏன் முடிந்தால் முயற்சித்து பார்க்க கூடாது, நல்லது நடக்கவில்லை என்றாலும், கெட்டது நடக்க வாய்ப்பில்லையே. நம்பிக்கையோடு எதை செய்தாலும் அதற்க்கு பலன் உண்டு, அது கடவுளுக்கு எனும் போது கொஞ்சம் கூடுதல் சக்தி இருப்பதாகவே உணருகிறேன்.
கடவுள் நம்பிக்கை பற்றி பேசும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது நமது பதிவர் அனுராதா அவர்கள் கூறியது தான். “நான்கு பக்கமும் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்”
 ஓதி மலை முருகனின் அற்புதம்
தூரத்தில் இருந்து ஒரு கிளிக்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
பார்க்குறதுக்கு சின்ன மலையா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, ஏறும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
 ஓதி மலை முருகனின் அற்புதம்
மலையின் ஆரம்பம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
ஒவ்வொரு 300 படிக்கட்டிற்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் இருக்கும் (850 படிக்கட்டு வரை)
 ஓதி மலை முருகனின் அற்புதம்
சமதரையே கிடையாது முழுவதும் படிக்கட்டே தான்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
850 வது படிக்கட்டு அருகே ஒரு சிறு கோவில்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
இதன் பிறகு இளைப்பாறும் மண்டபம் கிடையாது
 ஓதி மலை முருகனின் அற்புதம்
உயரத்தில் இருந்து ஒரு கிளிக்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
கோவிலை அடைந்த பிறகு கோவிலின் முகப்பு பகுதி
 ஓதி மலை முருகனின் அற்புதம்
கடைசி 100 படிக்கட்டு இங்கே தான்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கோபுரம் மட்டுமே எடுத்தேன்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
தூரத்தில் தெரிவது பவானி சாகர் அணையின் தண்ணீர்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
மேக மூட்டம் ஒரு சில இடங்களில் இருப்பது மேலே இருந்து பார்க்கும் போது அழகாக தெரிந்தது
 ஓதி மலை முருகனின் அற்புதம்
வெய்யில் நேரத்தில் காலில் செருப்பு இல்லாமல் ஏற இறங்க முடியாது, ஒரு முறை என் அக்கா இருவர் கோவிலுக்கு போகும் போது வெய்யில் இல்லாததால் செருப்பு போடாமல் சென்று விட்டு வரும் போது வெய்யில் கொளுத்தி, நடக்க முடியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது தனி கதை. கருங்கல் என்பதால் சூடு தாறுமாறாக இருக்கும்.
ஓதி மலை (முடிந்தால்) செல்க முருகன் அருள் பெருக

For more

For more details (about how to go there etc.) contact  madambakkam Shivakumar Swamigal at 94440 80 490.

Saturday, October 15, 2011

நட்சத்திர கோயில்கள்

 



அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:அக்னீஸ்வரர்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:சுந்தரநாயகி
 தல விருட்சம்:வன்னி, வில்வம்
 தீர்த்தம்:-
 ஆகமம்/பூஜை:சிவாகமம்
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:திருநல்லாடை
 ஊர்:நல்லாடை
 மாவட்டம்:நாகப்பட்டினம்
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம். கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு. 
   
 தல சிறப்பு:
   
 இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். 
   
போன்:
   
 +91 4364-285 341,97159 60413,94866 31196 
   
 பொது தகவல்:
   
 பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார்.
அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர்.
இக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
 
   
 
பிரார்த்தனை
   
 பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். 
   
நேர்த்திக்கடன்:
   
 பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள். 
   
 தலபெருமை:
   
 கார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது. 
   
  தல வரலாறு:
   
 மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது. 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். 
For all star temples :

நட்சத்திர கோயில்கள் :
http://temple.dinamalar.com/StarTemple_list.php

Wednesday, October 12, 2011

அஸ்வினி நட்சத்திர வழிபாடு





தல சிறப்பு:
    
 இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். 
    
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம். 
   
போன்:
   
 +91 4369 222 392, 94438 85316, 91502 73747 
    
 பொது தகவல்:
   
 
அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.
 
   
 
பிரார்த்தனை
    
 
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
   
 தலபெருமை:
   
 
அஸ்வினி நட்சத்திரத்தலம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர
÷தவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.
கஜசம்ஹார மூர்த்தி: தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.
தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.
 
   
  தல வரலாறு:
   
 
ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல,
இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.
அஸ்வினி நட்சத்திர வழிபாடு
ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி
தன்னோ அஸ்வினௌ பிரசோதயாத்.
 
 

அஸ்வினி நட்சத்திர வழிபாடு

அஸ்வினி நட்சத்திர வழிபாடு

 

அஸ்வினி நட்சத்திர வழிபாடு

Sunday, September 25, 2011

நவராத்திரி

நவராத்திரி ஒன்பது நாள் பூஜைகள், அலங்காரங்கள், நைவேத்தியங்கள்!





நல்வரம் தந்து அருள்!

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி புரியும் பாதாம் புயமலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி! புராணி! திரிபுவனேசுவரி! மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி! வராகி! எழில் வளர்திருக்கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

- அபிராமி அந்தாதி

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது மரபு. முதல் நாளன்று அசுரர்களாகிய மது- கைடபரை சம்ஹரிக்க உதவிய அம்பிகையை, அபயம்- வரதம், புத்தகம், அட்ச மாலையுடன் திகழும் துர்கையாக அலங்கரிக்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் ஒன்பது விதமான பெண்குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும் என்கிறது தேவி பாகவதம்.இந்தக் குழந்தைகள், 2 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதல் நாளன்று 2 வயது குழந்தையை 'குமாரி'யாக பாவித்து வணங்க வேண்டும். இதனால் ஆயுளும் செல்வமும் பெருகும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிற பூக்களை சமர்ப்பித்து அம்பாளை வழிபட வேண்டும். இதன்படி, செவ்வரளி, சாமந்திப் பூக்களால் தேவியை அர்ச்சித்து வணங்கலாம்.

நைவேத்தியம்

காலை எலுமிச்சை சாதம்: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். சாதத்தை பாத்திரத்தில் போட்டு தாளித்தவற்றை கொட்டி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை பாசிப்பயறு சுண்டல்: பாசிப்பயறை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊறியதும் வேகவைக்க வேண்டும். பிறகு, வெல்லப் பாகு காய்ச்சி, இதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கினால் சுண்டல் ரெடி.


--------------------------------------------------------------------------------


எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டில் இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள்ளளவும் முடியாதுநின் உனது அம்மருவும் கடைக்கண்ணருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து வனச நிகர் நின் பாதம் நம்பினேன் வந்தருள்செய்! வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே

- அபிராமி அந்தாதி

இரண்டாம் நாளன்று மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரியின் வடிவில் அலங்கரிப்பர்.

இந்த நாளில் 3 வயதுள்ள பெண் குழந்தையை, 'திரிமூர்த்தி' யாக பாவித்து வழிபடுவது நலம். இதனால் தன-தானியங்கள் பெருகும்.

2-ஆம் நாளன்றும் அம்பாளுக்கு மஞ்சள் அல்லது செந்நிற மலர்களை அர்ப்பணிக்கலாம். சிவப்பு நிறக் கொன்றை உகந்தது.

நைவேத்தியம்

காலை எள்ளு சாதம்: எள்ளை எண்ணெயில்லாமல் வறுக்கவும். பிறகு, எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து, எள் சேர்த்து நைஸாக பொடிக்கவும். சாதத்தில் பொடித்த எள் பொடி, உப்பைத் தூவி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.

மாலை மொச்சை மசாலா சுண்டல்: முதல் நாளே ஊற வைத்த மொச்சையுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, தனியா, உப்பு கலந்து அரைத்த விழுதை சேர்த்து, வேகவைத்து இறக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, எண்ணெயில் கடுகு-கறிவேப்பிலை தாளிக்கவும்.


--------------------------------------------------------------------------------


மஹா தேவீம் மஹா சக்திம் பவானீம் பவ வல்லபாம் பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோக மாதரம்

- ஸ்ரீ தேவி அஷ்டகம்

பொருள்: தேவியே! மஹாதேவனின் மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலையைப் போக்குபவளும், உலகங்களுக்குத் தாயுமான தங்களை வணங்குகிறேன்.

மூன்றாம் நாளன்று மகிஷாசுர வதம் செய்த தேவியை, சூலம் ஏந்தியவளாக, மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலமாக அலங்கரித்து வழிபட வேண்டும். இந்தக் கோலத்தில் இருக்கும் தேவியை கல்யாணி என்றும் சொல்வர்.

நவராத்திரி- திருதியை தினத்தில் அதாவது 3-ஆம் திருநாளன்று 4 வயதுள்ள பெண் குழந்தையை 'கல்யாணி' என்ற திருநாமத்தால் வழிபட வேண்டும். இதனால் வித்தைகளில் வெற்றி, அரச மரியாதை உண்டாகும்.

செம்பருத்தி, தாமரை மலர்கள் அர்ப்பணித்தும், இந்த மலர்களால் அர்ச்சித்தும் அம்பாளை வணங்குவது நலம்.

நைவேத்தியம்

காலை தயிர் சாதம்: சாதத்தை குழைவாக வடித்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தாளித்துக் கொட்டி, தயிரை விட்டு கலக்கவும்.

மாலை காராமணி கார சுண்டல்: காராமணியில் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். இதையடுத்து தண்ணீரை வடித்த பிறகு, இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துக் கலக்கவும்.


--------------------------------------------------------------------------------


தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம் அஸ்மின்ன கிஞ்சன விஹங்கசிசௌவிஷண்ணே துஷ்கர்ம கர்மம் அபநீய சிராய தூரம் நாராயண ப்ரணயினீ நயனாம்பு வாஹ:

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: கருணையாகிய அனுகூலக் காற்றுடன் கூடிய மகாலட்சுமி யின் கண்களாகிய நீருண்ட மேகம்... தரித்திரத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சிறிய சாதகப் பறவையிடம், வெகு நாட்களாக ஏற்பட்ட பாவம் எனும் தாபம் போக்கி, பொருள் மழையை அருளட்டும்.

4-ஆம் நாளன்று, ஜயதுர்கை திருக்கோலம். சிங்காதனத்தில்... இடையூறுகள் நீங்கிய தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங் களை ஏற்றருளும் கோலத்தில் உள்ள இவளை, ரோகிணி என்பர்.

இன்று ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை, 'ரோகிணி' என்ற திருநாமத்துடன் வழிபட வேண்டும். இதனால் ரோகங்கள் நீங்கும்.

நவராத்திரியின் 4,5,6-ஆம் நாட்களில் செந்நிற மலர்களால் தேவி பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அதன்படி சதுர்த்தி நாளில் செந்தாமரை கொண்டு அம்மன் வழிபாடுகளைச் செய்யலாம்.

நைவேத்தியம்

காலை சர்க்கரை பொங்கல்: சிறிது நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, 6 கப் தண்ணீரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால்விட்டு, கொதித்ததும் கெட்டியாக வரும்போது தீயைக் குறைத்து, தயாராக வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து, சாதத்தை போட்டு கிளறவும். நடுநடுவே நெய் சேர்க்கவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

மாலை பட்டாணி சுண்டல்: நீரில் நன்கு ஊறிய பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பட்டாணி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தேங்காய், மாங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.


--------------------------------------------------------------------------------


கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஷூ ஸம்ஸ்திதாயை தஸ்யை நமஸ் த்ரிபுவனைக குரோஸ் தருண்யை

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: சரஸ்வதிதேவி என்றும், கருட வாகனனின் மனைவியாகிய மகாலட்சுமி என்றும், சாகம்பரியாகிய பூமாதேவி என்றும் பார்வதி என்றும் பிரசித்தி பெற்று, படைத்தல்- காத்தல்- ஒடுக்கல் ஆகிய விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூன்று உலகங்களுக்கும் குருவாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனுடைய பத்தினியானவளுமான ஸ்ரீமகாலட்சுமிக்கு நமஸ்காரம்.

5-ஆம் நாளன்று அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் அம்பாளை அலங்காரம் செய்வர். சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த துர்காதேவி, சும்பன் எனும் அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவன் தெரிவிக்கும் தகவலை செவிமடுப்பவளாகக் காட்சி தருவாள்.

இன்று 6 வயதுள்ள பெண் குழந்தையை, 'காளிகா' என்ற திருநாமத்தில் அழைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பாளை, காளிகாதேவியாக தியானித்து, மனமுருக வழிபடுவதால் பயம் நீங்கும். இடையறாது தொல்லைகள் தந்து வந்த எதிரிகள் அடங்குவர்; பகை ஒழியும்.

இந்நாளில் செவ்வரளி மலர் மாலை அணிவித்தும், இந்த மலர்களால் அம்பாளின் திருநாமம் போற்றிச் சொல்லி அர்ச்சித்தும் வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை பால் சாதம்: பசும்பாலை சுண்ட காய்ச்சவும். சாதத்தை குழைய வேக விடவும். இதில் காய்ச்சிய பாலை விட்டு, சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.

மாலை கார்ன் வெஜிடபிள் சுண்டல்: சோளத்தில் உப்பு சேர்த்து, வேக வைத்து இறக்கி, தண்ணீரை வடிக்கவும். கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கலக்கவும்.


--------------------------------------------------------------------------------


ஸேவே தேவி த்ரிதச மஹிளா மௌளிமாலார்ச்சிதம் தே ஸித்திக்ஷேத்ரம் சமிதவிபதாம் ஸம்பதாம் பாதபத்மம் யஸ்மின்னீஷந்நமிதசிரஸோ யாபயித்வா சரீரம் வர்த்திஷ்யந்தே விதமஸி பதே வாஸூதேவஸ்ய தன்யா:

- ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி

கருத்து: தேவியே... தேவப் பெண்களின் சிரசுகளின் வரிசைகளால் அர்ச்சிக்கப் பட்டதும், குறையில்லா ஐஸ்வரியங்களுக்கு உற்பத்தி ஸ்தானமுமாகிய தங்களின் பாதக் கமலத்தில் தலை வணங்கியவர்களும், பாக்கியம் பெற்றவராக சரீரம் விலகிய பின் வைகுண்டத்தில் நித்யவாசம் செய்வார்களோ... அந்த பாத கமலத்தை சேவிக்கிறேன்.

6-வது நாளில் சர்ப்பராஜ (பாம்பு) ஆசனத்தில் சண்டிகாதேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் அலங்கரிப்பர். அட்சமாலை, கபாலம், தாமரை, தங்கக் கலசம் ஆகியவற்றை ஏந்தியவண்ணம் திகழும் தேவியின் இந்த வடிவம், தும்ரலோசனனை வதம் செய்த கோலமாம்.

நவராத்திரியில் சஷ்டி தினத்தில் ஏழு வயதுள்ள பெண் குழந்தையை, 'சண்டிகா' எனும் திருநாமத்துடன் வழிபடுவதால் செல்வம் சேரும்.

இந்த தினத்தில் செந்தாமரை, செம்பருத்தி, ரோஜா ஆகிய மலர்களால் அர்ச்சித்தும், மாலை அணிவித்தும் சக்தியை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை கல்கண்டு சாதம்: ஒரு டீஸ்பூன் நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை வறுத்து வெந்நீரை விட்டு நன்றாக அலசவும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து, களைந்த அரிசியைப் போட்டு வேகவிடவும். கடாயில் கல்கண்டைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதில் சாதம், பருப்பைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். பிறகு, சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை ராஜ்மா சுண்டல்: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, உப்பு சேர்த்து, வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு எண்ணெயில் கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து, இதனுடன் வேகவைத்த ராஜ்மாவை கலந்து இறக்கவும்.


--------------------------------------------------------------------------------


கலைமகளே அருள்வாய் கற்பனைத் தேன் இதழாள்- சுவைக் காவியம் எனும் மணிக் கொங்கையினாள் சிற்பம் முதற் கலைகள்- பல தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள் சொற்படு நயம் அறிவாள்- இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார் விற்பனத் தமிழ்ப் புலவோர்- அந்த மேலவர் நாவெனும் மலர்ப் பதத்தாள்

- மகாகவி பாரதியார்

நவராத்திரியின் 7-ஆம் நாளன்று தேவியை, தங்கமயமான பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவியாக அலங்கரிக்க வேண்டும். ஒரு காலை மடித்து வைத்து, மற்றொரு காலை தாமரை மலரில் ஊன்றியிருப்பது போல் இந்த தேவியை அலங்கரிப்பது சிறப்பு.

இன்று 8 வயதுள்ள பெண் குழந்தையை, சாம்பவியாக பூஜிக்க வேண்டும். இதனால் சௌபாக்கியங்களும் அரச போகமும் கிடைக்கும்.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவிக்கு உரியது என்பது பொது நியதி. இந்த நாட்களில் வெண்ணிற மலர்களை அம்பாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 7-ஆம் நாளன்று மல்லிகையால் அர்ச்சித்து அம்பாளை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை வெண் பொங்கல்: அரிசி, பயத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மாலை கடலைப்பருப்பு புதினா சுண்டல்: கடலைப்பருப்பை உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும்.


--------------------------------------------------------------------------------


புத்தகத் துள்ளுறை மாதே! பூவில் அமர்ந்துறை வாழ்வே! வித்தகப் பெண்பிள்ளை நங்காய்! வேதப் பொருளுக்கிறைவி! எக்காலும் உன்னைத் தொழுவோம் எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்!

நவராத்திரியின் 8-ஆம் நாளன்று... ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும்.

அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய- வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.

இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் கொடூரமான பகைவர்களும் அழிவார்கள். செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும்.

இன்று முல்லை மலர்களால் ஆன மாலை அணிவித்தும், வெண் தாமரை மலர்களால் அலங்கரித்தும் தேவியை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை தேங்காய் சாதம்: எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் தேங்காய் துருவலைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வறுத்து சாதத்துடன் கலக்கவும். இதன் பிறகு நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்க்க வேண்டும்.

மாலை கொண்டக்கடலை சுண்டல்: சென்னாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்த கொண்டக்கடலை, அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி மிளகுத்தூள் தூவவும்.


--------------------------------------------------------------------------------


நங்காய் நங்காய் நமோஸ்து! ஞானக் கொழுந்தே நமோஸ்து! கல்விக் கரசி நமோஸ்து! கணக்கறி தேவி நமோஸ்து! சொல்லும் பொருளே நமோஸ்து! சூட்சுமரூபி நமோஸ்து!

9-ஆம் நாளன்று சும்ப- நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவர்.

இன்று 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டுமாம். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஒன்பது நாட்களும்... பூஜிக்க வேண்டிய பெண் குழந்தைகளை ஆசனத்தில் அமர்த்தி, அவர்களின் பாதங்களைக் கழுவி, பூக்கள் தூவி வழிபடுவதுடன், பிரார்த்தனைகளை மனதில் சொல்லியபடி வணங்க

வேண்டும். இவர்களுக்கு, நம் வசதிக்கு தகுந்தபடி ஆடை- அணிகலன்கள் அளிப்பதால் மிகுந்த நன்மை உண்டு.

இன்று அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களை அம்பாளுக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை வெல்ல புட்டு: புழுங்கலரிசியை சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், நீர் சேர்த்து தயிர் சாதம் போல் தளர கலந்து, துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் தேய்த்துக் கொள்ளவும். நெய்யில் தேங்காய், முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து முத்துப் பாகு காய்ச்சவும். இதில் உதிர்த்த ரவை, தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி, நெய் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.

மாலை பாசிப்பருப்பு சுண்டல்: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, இட்லி தட்டில் பரப்பி, வேக வைக்கவும். கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு, வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.


நவராத்திரி விரத பாடல்கள்


 இந்தத் தினத்தில் பாடப்படும் நவராத்திரி பாமாலையினை நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள் 3m_Sagalakala valli malli.mp3 இது பெண் குரல். ஆண்குரலில் கேட்க இங்கு கிளிக் செய்யுங்கள் Unknown Artist - Unknown Album - 01. Track 1.mp3